
பேரிடரில் உயிரிழந்த விலங்குகள்!!! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் உயிரிழந்த மீன்களைத் தொடவோ, சேகரிக்கவோ அல்லது உட்கொள்ளவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த விலங்குகளைக் கையாளும் முன் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) அல்லது உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
தூய்மைப் பணிகளில் ஈடுபடுபவர்கள், கையுறைகள், காலணிகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சவர்காரம், மற்றும் சுத்தமான தண்ணீரில் கைகளை நன்கு கழுவுதல் உள்ளிட்ட கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
உணவு மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மேலும் சடலங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெளியில் வேலை செய்யும் போது கொசு விரட்டியைப் பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கும் பாதுகாப்பான மீட்சியை ஆதரிப்பதற்கும் இந்த வழிகாட்டுதல் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
