பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் புத்தக விற்பனையை இரத்து செய்த அமேசன்

பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் புத்தக விற்பனையை இரத்து செய்த அமேசன்

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் விதித்திருக்கும் தடையைக் கருத்திற்கொண்டு, அவரால் எழுதப்பட்ட ‘த டேர்னிங் பொயின்ட்’ எனும் புத்தகத்தின் விற்பனையை அமேசன் நிறுவனம் பிரிட்டனுக்குள் இரத்து செய்துள்ளது.

2005 செப்டெம்பர் – 2009 ஜுலை வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படைத் தளபதியாகப் பதவி வகித்த வசந்த கரன்னாகொடவின் கட்டளையின்கீழ் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து அவருக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பிரிட்டன் அரசாங்கம் தடை விதித்தது.

இந்நிலையில் வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட ‘த டேர்னிங் பொயின்ட்’ எனும் புத்தகத்தை பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளமான அமேசனில் கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் அவருக்கு எதிராக பிரிட்டன் தடை விதித்திருப்பதன் காரணமாக பிரிட்டனுக்குள் அப்புத்தகம் விற்பனை செய்யப்படக்கூடாது எனவும், ஆகவே அப்புத்தக விற்பனையை அமேசனின் பிரிட்டன் கிளை இரத்து செய்யவேண்டும் எனவும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டம் வலியுறுத்தியிருந்தது.

அதனையடுத்து பிரிட்டன் அரசாங்கத்தின் தடையை கருத்திற்கொண்டு பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் ‘த டேர்னிங் பொயின்ட்’ புத்தக விற்பனையை இரத்து செய்வதாக அமேசன் நிறுவனத்தின் பொதுக் கொள்கைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Share This