அல்ஜெஸீரா நேர்காணல்: ரணிலுக்கு எதிராக வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அல்ஜெஸீரா ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் மேற்கொண்ட நேர்காணலை “வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலென” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: மெஹ்தி ஹசனை முன்னரும் நான், பார்த்திருக்கிறேன். மோதல் போக்குடன் எப்போதும் ஆக்ரோஷமாகவே அவர், காணப்படுவார். ரணில் விக்கிரமசிங்கவுடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
தாக்குவதை நோக்கமாகக் கொண்ட நேரடி விசாரணை யாகவே அதை,நான் பார்க்கிறேன். நேர்காணல் வழங்குபவர், எதிரியின் பக்கம் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் ஊடகவியலாளரிடம் இருந்தது.இதற்காக,இலங்கை எதிர்ப்பு உணர்வுள்ள பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
சொந்த சொல்லாடலுக்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டால் அதைச் செவிமடுக்க மஹ்திஹஸன் மறுத்தார். பலமுள்ள நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் யுத்த குற்றங்கள்,அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோஷத்துடன் விமர்சிப்பாரா? என்றும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.