துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித் குமார் அணி
துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், தனது சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் குமார், கடந்த சில மாதங்களாகவே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தியுள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பின் கார் ரேஸ் பக்கம் திரும்பாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
எனினும்,15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனது கனவை நோக்கி ஓட தொடங்கியுள்ளார். இதற்காக உடல் எடையையும் குறைத்துள்ளார்.
இந்நிலையில், துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி பங்கேற்றிருந்தது.
24H சீரிஸ் ரேஸ் என்பது 24 மணி நேரம் தொடர்ச்சியாக காரினை ஓட்ட வேண்டும். ஒரு அணியில் மூன்று முதல் நான்கு ஓட்டுநர்கள் இருப்பார்கள். அவர்கள் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்ட வேண்டும்.
இதனால் அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக ஒரேயொரு அணிக்காக மட்டுமே அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
Porsche GT4 போட்டியில் மட்டுமே அஜித் குமார் ஓட்டுநராக பங்கேற்றார். துபாயில் போட்டி நடப்பதால், அவரை காண்பதற்காக ரசிகர்கள் பலரும் கூடினர். இதனை பார்த்து வர்ணனையாளர்களே வியந்து அஜித் குமார் பற்றி பேசி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் 24H சீரிஸ் ரேஸ் முடிவடைந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் Porsche 911 GT3 Cup (992) மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அஜித் ரேஸிங் அணி மூன்றாது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
அஜித் குமார் அணி 3வது இடத்தை பிடித்துள்ளதால், சக ஓட்டுநர்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடிய அஜித் குமாருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.