எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறியது: “பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும். இதை அறிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு.

இந்த கூட்டணி, தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் செயல்படும். 1998 முதல் அதிமுக – பாஜக கூட்டணி இருந்து வருகிறது. இது ஒரு இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலத்தில் இந்த கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 39 இடங்களில் 30 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. நாங்கள் இணைந்துதான் இங்கே ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி இருக்கும். வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களை நாங்கள் சொல்கிறோம். இப்போது எவ்வித குழப்பத்தையும் திமுக ஏற்படுத்த நாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம்.

கூட்டணி தொடர்பாக அதிமுக நிபந்தனை ஏதும் விதித்துள்ளதா என கேட்கிறீர்கள். அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுக ஒன்றிணைய அழைப்பு விடுப்பீர்களா என கேட்கிறீர்கள். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக வருவது இருவருக்குமே வெற்றியைத் தரும். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் வெற்றி பெற்ற பிறகு எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பதும் பிறகு பேசப்படும். இப்போது அது பேசுபொருளாக இல்லை.

திமுக அரசு இந்து மதம், மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என பல பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல், மோசடி போன்ற தங்கள் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை அவர்கள் எழுப்புகிறார்கள். திமுகவின் மிகப் பெரிய ஊழல்கள், மிக மோசமான சட்டம் ஒழுங்கு நிலை, தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவைதான் வரப்போகும் தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருக்கும்.

இந்த தேர்தலில் திமுக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. டாஸ்மாக்கில் ரூ.39,000 கோடி மோசடி, மணல் கொள்ளையில் ரூ.5,700 கோடிக்கு மேல் மோசடி, மின்உற்பத்தியில் ரூ.4,300 கோடி மோசடி, எல்காட் பங்கு விற்பனையில் ரூ.3000 கோடி மோசடி, போக்குவரத்து துறையில் ரூ. 2 ஆயிரம் கோடி மோசடி, பண மோசடி ரூ.1 ஆயிரம் கோடி, ஊட்டச்சத்து கிட் வழங்கியதில் ரூ.450 கோடி மோசடி, இலவச வேட்டி சேலை வழங்கியதில் ஊழல், அரசு வேலைக்காக பணம் பெற்ற ஊழல், செம்மண் கடத்தல் ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் என பல்வேறு ஊழல்கள் திமுக ஆட்சியில் நடந்துள்ளது. இதற்கு பதில் சொல்ல முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று அமித் ஷா கூறினார்.

Share This