வயது 43, ஐபிஎல் சீசன் 18, தோனி இதுவரை சாதித்தது என்ன? 

வயது 43, ஐபிஎல் சீசன் 18, தோனி இதுவரை சாதித்தது என்ன? 

43 வயதான மகேந்திர சிங் தோனி தனது 18-வது ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனிக்கான மவுசு என்பது இமியளவும் குறையவில்லை. சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் தோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐபிஎல் களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன். 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை விளையாடி உள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அதிக முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதோடு 2010, 2014 ஆகிய சீசன்களில் தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பட்டம் வென்றுள்ளது.

ஐபிஎல் களத்தில் தோனி மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84. மொத்தம் 252 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறனுக்கு நிகரானவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இன்று இல்லை என்று சொல்லலாம்.

தோனி என்பவர் அனைவருக்கும் பிடித்த போக முக்கிய காரணம் அவரது பின்புலம். அவர் கிரிக்கெட்டில் சாதித்த அவரது விடாமுயற்சி, மன உறுதியின் காரணமாகவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்க காரணம்.

சீசன் வாரியாக தோனியின் செயல்பாடு,

கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.

2023 சீசனில் அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சிஎஸ்கே வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை தோனி எடுத்தார்.
2021 சீசனில் தோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது.
2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை தோனி எடுத்தார்.
2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் தோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார்.
2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே. இந்த சீசனில் 455 ரன்களை தோனி எடுத்தார்.
2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக தோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.
2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை தோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை தோனி எடுத்தார்.
2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை தோனி எடுத்தார்.
2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை தோனி எடுத்தார்.
2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை தோனி எடுத்தார்.
2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சிஎஸ்கே. இந்த சீசனில் 358 ரன்களை தோனி எடுத்தார்.
2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை தோனி எடுத்தார்.
2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இந்த சீசனில் 287 ரன்களை தோனி எடுத்தார்.
2009 சீசனில் அரை இறுதியில் சிஎஸ்கே விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை தோனி எடுத்தார்.
2008 சீசனில் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை தோனி எடுத்தார்.

Share This