நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், அதிக வெப்பநிலை காரணமாக மக்களின் நீர் நுகர்வு அதிகமாக இருப்பதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும் என்றும், அது அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், இந்த வறண்ட வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.