அதானியின் விலகல் இலங்கையின் முதலீட்டு சூழலுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவு

அதானி கிரீன் எனர்ஜியின் விலகலை அரசாங்கம் கையாண்ட விதத்தை விமர்சித்து, இது இலங்கையின் முதலீட்டு சூழலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் வரவு செலவு திட்ட கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம், அதானியின் விலகலின் நீண்டகால பொருளாதார தாக்கங்களைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நீங்கள் அதானியை கைவிடவில்லை. உண்மை என்னவென்றால், அதானி உங்களை கைவிட்டார்,
இந்தத் திட்டம் இலங்கையின் மின்சாரத் தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல, இந்தியாவிற்கான எரிசக்தி ஏற்றுமதியையும் உள்ளடக்கியது, இது ஒரு நிலையான வருவாய் ஓட்டத்தைப் பெற்றிருக்க முடியும்.” எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய ஐக்கிய அரபு அமீரக பயணத்தை சுட்டிக்காட்டி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அரசாங்கத்தின் திறனையும், ஏதேனும் உறுதியான முதலீடுகள் நிறைவேறியதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தனது நாடாளுமன்ற உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது எக்ஸ் தள பதிவில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
குறித்த பதிவில்,
அதானியின் விலகல் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தியை அனுப்பியுள்ளது.
இங்கே உள்ள பெரிய தவறு என்னவென்றால், அதானியின் வெளியேற்றம் இலங்கைக்குச் செல்லும் வருங்கால வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.
அதானி பசுமை எரிசக்தி திட்டம் ஆரம்பத்தில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு நலன்களுடன் ஒத்துப்போகும் ஒரு மூலோபாய முயற்சியாகக் கருதப்பட்டது, இது இலங்கையை ஒரு முக்கிய எரிசக்தி ஏற்றுமதியாளராக நிலைநிறுத்துகிறது.
திட்டத்தை இரத்து செய்வது பெரிய அளவிலான முதலீடுகளை, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஈர்க்கும் நாட்டின் திறன் குறித்த கவலைகளை எழுப்புகிறது என்பது கவனிக்கத்தக்கது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மனோ கணேசனின் கருத்துக்களுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.