”இணக்கப்பாட்டுடன் செயல்படுங்கள்” – அரசாங்கத்துக்கு சம்பிக்க பகிரங்க வேண்டுகோள்

”இணக்கப்பாட்டுடன் செயல்படுங்கள்” – அரசாங்கத்துக்கு சம்பிக்க பகிரங்க வேண்டுகோள்

சமகால அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், தொழிலாளர் வர்க்கத்துடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்துவதில்லை என  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்தக் கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

“அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் செய்யப்பட்ட சம்பள திருத்தங்கள் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமக்கு  விளக்கப்படுத்தியது. அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நமது சுகாதார குறியீடுகள் வளர்ந்த நாட்டின் மட்டத்தில்தான் உள்ளன. எம்மை சுற்றியுள்ள பிராந்திய நாடுகளுடன் கூட இதை ஒப்பிட முடியாது. கடந்த அரசாங்கங்களால் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பே இதறகு காரணமாகும். நாங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அவர்களின் பிரச்சினை என்னவென்றால், கூடுதல் கடமைகள் மற்றும் அன்றைய தினம் ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு கூடுதலாக செய்யப்படும் கடமைகளுக்கான கொடுப்பனவு விகிதத்தை மாற்றுவது மற்றும் விடுமுறை நாட்களுக்காக அவர்கள் பெற்ற கூடுதல் கொடுப்பனவு  விகிதங்களில் மாற்றத்தில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அரசாங்க அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேசி எட்டப்பட்ட முடிவுகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  நாட்டு மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அரச மருத்துவ அதிகாரிகளும் அரசாங்கமும் கடந்த கால தவறுகளை கைவிட்டு இந்த நேரத்தில் கலந்துரையாடல் செயல்பாட்டில் ஈடுபட்டு ஒரு தீர்வை எட்ட வேண்டும்.

நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த அநீதியை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று துறைசார் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன்டி கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதன் ஊடாக முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This