தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.

இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது.

இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த இளைஞன் தலவாக்கலை புகையிரத பணியளார்களுக்கான வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதே நேரம் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட இன்னும் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளார்.

(நுவரெலியா நிருபர்)

 

Share This