தலைமறைவாகியிருந்த ‘மோல் கசுன்’ கைது

தலைமறைவாகியிருந்த ‘மோல் கசுன்’ கைது

அவிசாவளை உட்பட பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தியதுடன் , நான்கு பேரை சுட்டுக் கொன்று இருவரை பலத்த காயப்படுத்தி, பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மோல் கசுன் என்ற நபர் இந்தியாவில் இருந்து திரும்பி மீண்டும் இலங்கைக்கு வந்து ஹோமாகமவின் கலவில பகுதியில் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 5,000 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவன் மன்னா ரமேஷின் முக்கிய உதவியாளராகப் பணியாற்றிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே 12, 2023 அன்று, சந்தேகநபர் அவிசாவளை, தல்துவ பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் கூர்மையான ஆயுதங்களால் இரண்டு பேரை வெட்டி படுகாயப்படுத்தினார். அதே மாதம் 26 ஆம் திகதி, தல்துவ சிலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை அவர் சுட்டுக் கொன்றார்.

செப்டம்பர் 20, 2023 அன்று, அவிசாவளை, தல்துவ பகுதியில் உள்ள குருபஸ்விலவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேரை T-56 துப்பாக்கியால் சுட்டு கொன்றார். சந்தேக நபர் செய்த முக்கிய குற்றங்களில் இவை சிலவையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்புலத்திலேயே மோல் கசுன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This