மலையகத்தில் மாடி வீடா, கோடி வீடா?

மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கான தமது கொள்கைத்திட்டம் என்னவென்பதை தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்கள் எனும் அடையாளத்தை முதன்முதலில் ஆவணம்மூலம் கொண்டுவந்தது நாங்கள்தான். தோட்டத் தொழிலாளர்களை தொழிலாளர்களாக அல்லாமல் பங்காளிகளாக மாற்றுவதற்குரிய முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம். அதனை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ரணசிங்க பிரேமதாசவால் மலையகத்துக்கு ஒரு வீடேனும் கட்டப்படாமை தொடர்பில் அவரது மகன் சஜித் பிரேமதாச மன்னிப்பு கூறவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி எம்.பியொருவர் குறிப்பிடுகின்றார். இது வேடிக்கையாக உள்ளது.
மலையக மக்களுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் காணி கொள்கை என்ன? எத்தனை பேர்ச்சஸ் வழங்கப்படும்? வாழ்வாதாரத்துக்குரிய காணி எப்படி? அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் மாடிவீடா அல்லது கோடி வீடா என்பதை பற்றி அறிவியுங்கள். மலையகத்துக்காக தற்போதைய அரசாங்கம் எதையும் செய்யவில்லை.” -என்றார்.