
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் தயாராகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 31 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி அடுத்த நாள் அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தவிர்ப்பதற்காக பொலிஸார் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனையிட்டு பதிவு செய்வது, அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதைத் தடுக்க போதுமானபாதுகாப்பு ஊழியர்களை குறிப்பாக பெண் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
