தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் – உண்மைத்தன்மையை ஆராயும் அரசாங்கம்
![தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் – உண்மைத்தன்மையை ஆராயும் அரசாங்கம் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் – உண்மைத்தன்மையை ஆராயும் அரசாங்கம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/0f76d0p_sri-lanka-mp-house-fire-650_650x400_09_May_22.webp)
காலி முகத்திடல் போராட்டத்தின் போது தீ வைத்து சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொள்ளும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழப்பீட்டு மதிப்பீட்டுக்காக முன்வைத்த சொத்துப் பெறுமதிகளின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பொது மக்கள் பிரதிநிதிகள் வழங்க வேண்டிய சொத்து பெறுமதிகள் மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முன்வைத்த தகவல்களை ஒப்பிட்டு பார்ப்பதே அதற்கான சிறந்த வழிமுறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நட்டஈடாக பெற்றுக் கொண்டுள்ள தொகையை பார்க்கும் போது அதிகளவு பெறுமதியான சொத்து காப்பீடு செய்யப்பட்டிருந்ததா இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காலி முகத்திடல் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தீ வைத்தமைக்கு நட்டஈடாக அரசாங்கத்தால் 122 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் கடந்த 6ஆம் திகதி வெளிப்படுத்தினார்.
அங்கு அதிகளவான இழப்பீட்டுத் தொகையை முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல (959 இலட்சம்) , ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (934 இலட்சம்) பெற்றுக் கொண்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி “மயினா கோ கம” மற்றும் “கோட்டா கோ கம” எனும் பெய்ரகளில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவானோரின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.