துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்

துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்

மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார கோரமுகத்தின் வெளிப்பாடு. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையக மக்களுக்கு எதிரான எல்லா சவால்களையும் எதிர்கொண்டு எல்லா சக்திகளையும் முறியடித்து இந்த மக்களுக்கு தலைமை கொடுத்து, தலை நிமிர வைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து மலையக மக்கள் குறித்து பேச வேண்டாம் என்று சொல்வதற்கு அமைச்சர் சந்திரசேகர் யார்?

இலங்கை வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்த போதும், வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்ட போதும், பாராளுமன்ற ஊப்புரிமை இருந்த போதும் ,அது இல்லாத போதும் அம்மக்கள் மத்தியில் நிலையாக நின்று அவர்களுக்கு குரல் கொடுப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கையாகும்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கத்தை அமைக்க வைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் மீது விரல் நீட்டுவதற்கல்ல. மாறாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். வெறும் வாய் சவாடல் மூலம் காலத்தை வீணடிக்காமல் மலையக மக்களின் வீடு , காணி, சம்பளம், தொழில் போன்றவற்றுக்கு தீர்வை முன் வையுங்கள்.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு துணிவிருந்தால் பாராளுமன்றத்தில் கூறியதை அட்டன் பிரதேசத்திற்கு வந்து ஒரு தோட்டத்தில் கூறி பார்க்கட்டும். அவருக்கு மலையக மக்கள் சரியான பாடத்தை புகட்டி அனுப்புவார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலில் நாம் பேச வேண்டியதில்லை பதிலாக மக்களே பேசுவார்கள். எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் தோல்வியை ஆரம்பித்து வைக்கும். அமைச்சர் சந்திரசேகரும் அவருடைய தேசிய மக்கள் சக்தியினருக்கும் தைரியம் இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு சபையாவது பிடித்துக் காட்டிவிட்டு வாய்ந்த சவடால் விடட்டும்.

அமைச்சர் சந்திரசேகரின் உரை மூலம் மக்களுக்கு பொய்களைக் கூறி அதன் மூலம் ஆட்சியைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டை சர்வாதிகா முறையில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கின்றதா? என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

Share This