பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்
![பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம் பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/063_2197654088.jpg)
பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் உருவாவதுதான் ஒரே தீர்வு எனவும் குறித்த அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாலஸ்தீன அமைப்பின் நிர்வாக, மறுசீரமைப்புத் திறனை மேம்படுத்த சிங்கப்பூர் தனது தொழில்நுட்ப உதவித் திட்டத்தின்கீழ் அந்த அமைப்புடன் செயல்படும் எனவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை மற்ற நாடுகளில் மறுகுடியமர்த்தி, அந்தப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதை பிரான்சில் உள்ள ரிவியேரா போன்ற கடற்கரை சொகுசுத் தளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
டிரம்பின் இந்தக் கூற்று உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனக் குரல்களை வரவழைத்தது. இது குறித்துப் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இனப் பேரழிவைத் தவிர்க்குமாறும் பிரச்சினைத் தீர்ப்பதாக எண்ணி நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்றும் டிரம்பை கேட்டுக்கொண்டார்.
“இரு நாட்டு கொள்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.