நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை
![நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Paddy-23-1.jpg)
நெல் உற்பத்தி செலவுகள் அதிகமாகவும், உரம் மற்றும் பிற உள்ளீடுகள் காரணமாக அறுவடை செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதால், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என மகாவலி சேனபுர பிரிவின் விவசாயிகள் அமைப்பின் தலைவர் கபில சிரில் பத்திரண தெரிவித்தார்.
தற்போது ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 100- 110 ரூபாய் வரை செலவாகிறது என்றும், தற்போது விவசாயிகள் விதை நெல், உரம், எண்ணெய், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் நெல்லை அறுவடை செய்து விற்பனை செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால், அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 150 ரூபாய் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது, அரசு நாட்டு நெல்லுக்கு கிலோவுக்கு 120 ரூபாயும், சம்பா நெல்லுக்கு 130 ரூபாயும் , கீரி சம்பா நெல்லுக்கு 132 ரூபாயும் உத்தரவாத விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் போதுமானதாக இல்லை. ஏனென்றால், இன்றைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, விவசாயம் செய்யும்போது அதைப் பயன்படுத்துவது ஒரு பெரிய செலவாகிவிட்டது. ஒரு கிலோ உப்பு வாங்க இரண்டு கிலோ அரிசி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒரு கிலோ நெல்லை கொடுத்து ஒரு தேங்காய் கூட வாங்க முடியாத நிலையை அடைந்துவிட்டோம். ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையை நாங்கள் கோரினோம்.
தற்போதைய விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, இந்த விவசாய நிலங்களுக்கு வந்து எங்களுடன் நெல் வயல்களில் இறங்கி, அப்போதைய அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாயை கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இன்று, அவர் விவசாயிகளை அவமானப்படுத்தி, ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபாய் விலையை நிர்ணயம் செய்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.