சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு – பயணிகள் சிரமம்

சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு – பயணிகள் சிரமம்

கடும் பனிமூட்டம் காரணமாக தமிழகத்தின் சென்னையில் 25 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது.

அத்துடன் மஸ்கட்டில் இருந்து 252 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூருக்கும், ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திருவனந்தபுரத்திற்கும், புனேவில் இருந்து 152 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைப்போல் சென்னையில் இருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன.

Share This