கிழக்கில் நெல் அறுவடை ஆரம்பம் – உத்தரவாத விலை எங்கே?

கிழக்கில் நெல் அறுவடை ஆரம்பம் – உத்தரவாத விலை எங்கே?

நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவுக்கு திறைசேரி 5 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு இன்னும் பணம் தேவை என்ற கோரிக்கை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பெயருக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் பலவீனமாகும். இது ஆட்சியில் காணப்படும் குறைபாடுகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நெல் கொள்முதல் செய்ய பணம் ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்ட பணத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் தற்போதைய அமைச்சர்கள் சிலர் வயல்வெளிகளுக்குச் சென்று உர மானியம் மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அதிகம் பேசினர். விவசாயத்துக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்த அரசுப் பிரதிநிதிகளால் நெல்லுக்கான உத்தரவாத விலையைக் கூட வழங்க முடியவில்லை.

நெல்லுக்கான விலை 80 ரூபாக காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் காலத்தில் 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவோம் என அரச பிரதிநிதிகள் தெரிவித்தனர். தாம் கூறிய பேச்சுக்களை இணையத்தில் இருந்தும் நீக்கி விட்டு, அனைத்தையும் மறந்துவிட்டுள்ளனர். இது மிகவும் நியாயமற்ற செயல். 2025 பெரும் போகத்தில் 2.5 மெட்ரிக் டொன் மற்றும் சிறு போகத்தில் 1.7 மெட்ரிக் டொன் என்றவாறு அரசாங்கம் நெல் அறுவடையை மதிப்பிட்டுள்ளது என கூறினார்.

குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில் நடந்த மக்கள் சந்திப்பொன்றில்  உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

புள்ளி விவர தரவுகள் எவ்வாறு இருந்தாலும், நெல்லுக்கான உத்தரவாத விலையை ஏன் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், இந்த அறுவடையை உத்தரவாத விலையில் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தவிர, பயிர் சேத நிவாரணம், காட்டு யானை – மனித மோதலால் ஏற்படும் பயிர் சேதம், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசு தவறிவிட்டது. விவசாயிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாரான அரசு இன்று மௌனம் காக்கிறது. இதே கதி அடுத்த போகத்திலும் தொடரக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Share This