“க்ளீன் ஸ்ரீலங்கா” எளிதான காரியம் அல்ல!

கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட 60 பேர் கொண்ட குழு போதுமானதாக இல்லை என்று முறைப்பாடு செய்தால், பாதுகாப்பும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு சட்டப்படி “பொருத்தமான” வீடு அல்லது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், எனவே அவர்கள் தற்போது வசிக்கும் ஆடம்பரமான அரசாங்க மாளிகைகளை காலி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மதிப்பீட்டின்படி, மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் அதே அரசாங்கத்திற்குச் சொந்தமான வீட்டில் வசிக்க விரும்பினால், அவர் மாதத்திற்கு ரூ.4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் இந்த முடிவை அறிவித்ததிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவும் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லவில்லை. அதற்காக அநுரகுமார திஸாநாயக்க அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான இந்த புதிய அரசாங்க முடிவுக்கு இதுவரை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இன்னும் அந்த இல்லங்களில் உள்ளனர், ஆனால் அவர்கள் இன்னும் அது குறித்து ஒரு பொது அறிக்கையை வெளியிடவில்லை.
எனினும், ஒரு புறம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களும் அரசாங்கத்தின் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வீடுகளிலும் இதே நிலைதான் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அரசாங்கத்தை விமர்சித்ததற்காக மகிந்த ராஜபக்சவைப் பழிவாங்குவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியிருந்தது.
மேலும், கடந்த தேர்தல்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்குகள் குறைவாக காணப்பட்ட பிரதேசங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக பழிவாங்கியிருக்கலாம் எனவும் சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனால் தான், யோஷித மற்றும் நாமலைக் குறிவைத்து வருவதாகவும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
எனினும், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது ஆட்சியமைத்த பின்னர் திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்குவதும் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளுள் உள்ளடங்குகிறது.
ஆக, இதை நடைமுறைப்படுத்துவதை ஏன் என இப்போது எதிர்ப்பவரகள் தேர்தல் வாக்குறுதி வழங்கப்படும் போது ஏன் மௌனமாக இருந்தார்கள் என்றொரு கேள்வி எழுகிறது அல்லவா? ஏன் எதிர்க்கவில்லை?
இதற்கிடையே தான், தற்போதைய அரசாங்கம் எழுத்துபூர்வமாக அறிவித்தால் மாத்திரமே அரச மாளிகையிலிருந்து வெளியேறுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய அறிவிப்பு தேவையில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை சட்டதிட்டங்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அரசாங்கத்தால் “பொருத்தமான” வீடு வழங்கப்பட வேண்டும் அல்லது அவரது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான வீட்டு வாடகையையோ வழங்க வேண்டும். என கூறப்படுகிறது.
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதைக் குறிக்கிறது. அதற்காக பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொது மக்கள் பணத்தில் வாழ வேண்டும் அதுவும் மக்களை விடவும் ஆடம்பரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய ஆடம்பர வாழ்க்கையை ஒழிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையை மக்கள் நிச்சயம் மறுக்க மாட்டார்கள், மறுக்கவும் முடியாது.
இத்தனை காலமாக மக்கள் வரிப் பணத்தில் பல சலுகைகளையும் பெற்று வந்த ஊழல் அரசியல்வாதிகள் தான் இதனை மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகள் மூலம் ஒரு விடயத்தை தெளிவாக உணர முடிகிறது. க்ளீன் ஸ்ரீலங்கா அவ்வளவு எளிதான விடயம் அல்ல.