சிறிய மாற்றத்தையும் வரவேற்போம்!

சிறிய மாற்றத்தையும் வரவேற்போம்!

(இன்றைய ஒருவன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

நாளுக்கு நாய் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. தினம் தினம் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளில் புதிய அரசாங்கத்தின் நகர்வு எவ்வாறு இருக்கிறது என்பதில் மக்களும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி அதிக அவதானம் செலுத்தி வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை தொடர்பில் அண்மைய தினங்களாக அதிகளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், தற்போது செயற்படும் விதத்துக்கும் இடையிலான இடைவெளியை சுட்டிக்காட்டி இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

உண்மையிலேயே, தமது வாக்குகளால் ஆட்சியமைத்திருக்கும் அரசாங்கம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். 76 வருடங்களாக ஆட்சியாளர்கள் ஊழலால் மக்களை ஏமாற்றி வந்ததன் பெறுபேறாகவே மக்கள் புதிய ஆட்சியாளரை தெரிவு செய்தனர். ஆக, பெறுமதியான மக்கள் வாக்குகளால் தெரிவான அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும், அவற்றை விமர்சிப்பதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.

இவ்வாறான பின்னணியிலேயே, அண்மைய தினங்களாக தேசிய மக்கள் சக்தியினரின் சில தீர்மானங்கள் குறித்தும், அரசாங்கத்தின் அமைச்சர்களின் உரைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஓரிரு விடயங்கள் சிந்திக்க தக்கவையாக இருந்தாலும் கூட அவற்றை வைத்து நாம் ஒரு இறுதி தீர்மானத்துக்கு வந்துவிட முடியாது. வந்துவிடவும் கூடாது.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலேயே, உள்நாட்டுப் போரை நிறைவுக்கு கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷஜத ராஜபக்ச 25ஆம் திகதி காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

25ஆம் திகதி காலை பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

யோஷித ராஜபக்சவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் கூட பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், பிணை கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

சட்டவிரோதமாகப் பெற்ற வருமானத்தைப் பயன்படுத்தி ரத்மலானை பகுதியில் நிலம் மற்றும் வீடு வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்களை ஒரு கணம் அமைதியைத் தழுவச் செய்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் அண்மைய காலமாக தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் எழுப்பிய பல அரசியல்வாதிகளும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகிறது.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பித்திருந்தது. அந்த அனைத்து தேர்தல் பிரசார மேடைகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலுவான ஒரு விடயத்தை முன்வைத்தது. தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது. அதுதான் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என்பது.

யோஷித ராஜபக்சவின் கைது, முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளில் குறைக்கப்பட்டமை ஆகியவற்றை இதன் வெளிப்பாடாக நாம் பார்க்க முடியும்.

எனவே, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக செயற்படுவதை மாற்றமாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் அநேகமானோர் (அப்பாவிகள்) விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றொரு விமர்சனமும் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறது.

“ஊழல்” காலங்காலமாக இலங்கையில் தலைதூக்கியிருக்கும் ஒரு அசுரன் என்றால் அது சரியாக இருக்கும்.

மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி, பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்கள் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்து விட்டு இறுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து மக்கள் வரிப் பணத்தையே சுரண்டும் அளவுக்கு அதிகாரம் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது.

இதுவரை காலமாக, நமது அரசியல்வாதிகள் வித்தியாசமாக நடந்து கொண்டனர். வளங்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். அதிக சலுகைகளை உறுதியளித்தவர்களுக்கு எங்கள் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

ஊழலை விடவும் நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகளை நிறைவேற்றியதால்தான் நாடு திவால் நிலையை அடைந்தது. ஆக, இவ்வாறு நடைமுறைக்கு வாக்குறுதிகளை அளித்தவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்களித்த நாமும், இந்தக் குற்றச்சாட்டில் பங்கெடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. எனினும், சிறிய நகர்வுகளை வரவேற்றால் நிச்சயம் அது ஒரு பாரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது ஊர்ஜிதம்.

Share This