ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு – ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது ஜூன் 3 ஆம் திகதி, சாட்சி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரி, உத்தியோகபூர்வ வேலைக்காக வெளிநாட்டில் இருப்பதால், சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூன் 3ஆம் திகதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.