அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி

அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி

அமெரிக்காவின் எல்லைகள் பாதுகாக்கப்படுமெனவும், அனைத்து எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாங்கள் எங்கள் செல்வத்தை மீட்டெடுக்கப் போகின்றோம். அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றவுள்ளோம்.

மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான முதல் படியாக நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்தோம். இந்த ஒப்பந்தம் நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று வெற்றியின் விளைவாக மட்டுமே நடந்திருக்க முடியும். பிணைக்கைதிகள் 3 பேர் இப்போது விடுவிக்கப்பட்டனர். முதலில், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் காசா போர் நடந்திருக்காது.

நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. ஜனாதிபதியாக இல்லாமல், நான்கு ஆண்டுகளில், பைடன் ஜனாதிபதியாக இருந்து சாதித்ததை விட அதிகமாக நாங்கள் சாதித்துள்ளோம். நான் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், 3வது உலகப் போர் நடக்காமல் தடுப்பேன். இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் ஜனநாயக கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதியான கமலா ஹாரிசை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This