மகிந்த வசிக்கும் வீட்டு மாதம் 46 இலட்சம் வாடகை – அநுர வெளிப்படுத்திய தகவல்
இந்தியாவுடன் பலமான உறவை கட்டியெழுப்பி எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹொரணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
பெரும்போக அறுவடையின் பின்னர் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரிசி இருப்புக்களை பராமரிப்பது முக்கியமானது.
அதேபோன்று வரவு -செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கப்பெறும். அரசாங்க ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் கிடைக்கப்பெறும்.
பௌத்தாகோக்க மாவத்தையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் இல்லதுக்கு மாத்திரம் 46 இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்பட வேண்டும் என அரச மதிப்பீட்டு திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. இன்னமும் அந்த வீடு அமைந்துள்ள காணி தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சியாளர்கள் இவ்வாறுதான் மக்கள் பணத்தை நாசமாக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் குறித்த சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு வீடு ஒன்றை வழங்க முடியும். இல்லாவிட்டால் சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதி உரித்தாகும். அதனால் அவரிடம் வீட்டை பெற்றுவிட்டு சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதியான 30ஆயிரம் ரூபாவை வழங்குவோம். இல்லாவிட்டால் மீதிப் பணத்தை செலுத்தி குறித்த வீட்டில் வாடகைக்கு இருக்க அனுமதியளிக்கப்படும். சந்திரிக்காவின் வீடு குறித்தும் மதிப்பீடு செய்யப்படும். அவர் லண்டனில் இருந்தார். தற்போது நாடு திரும்பியுள்ளதால் மதிப்பீடு செய்யப்படும்.
அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களை எமது அரசில் எவருக்கும் வழங்க மாட்டோம். அந்த வீடுகளுக்கு என்ன செய்வது என்பது தொடர்பில் ஆய்வை நடத்துமாறு கோரியுள்ளோம். அதன் பிரகாரம் அவை குறித்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வீடுகளை வழங்க மாட்டோம். நானும் பெற மாட்டேன்.
அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளில் உள்ள அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியின் பின்னர் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் பின்னர் இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நிதி திறைசேரிக்கு அனுப்பப்படும். மக்கள் பணத்தை இவ்வாறுதான் நாசமாக்கினர். அவற்றை சரிசெய்யும் போது இப்போது அழுகின்றனர். அவர்கள் எதிர்வரும் ஒன்றரை தசாப்தங்கள் அழுதுகொண்டிருக்க வேண்டும்.
எம்.பிகளில் ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். நாடாளுமன்றத்தில் உள்ள உணவுச்சாலை தொடர்பில் கருத்தாடலொன்று உள்ளது. எதிர்காலத்தில் உணவுக்கு உரியப் பணத்தை செலுத்தி உணவை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை செய்வோம். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டைதான் நாம் பெற்றோம். ஆனால், மீண்டும் அப்படியொரு சூழ்நிலை நாட்டில் உருவாக இடமளிக்கமாட்டோம்.
உலக பொருளாதார வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் உலக நாடுகளுடன் பலமான இராஜதந்திர உறவுகளை நாம் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இந்தியா எமக்கு அருகில் உள்ள வளர்ந்துவரும் பலமான பொருளாதாரம். அதனால் இந்தியாவுடன் நாம் பலமான இராஜதந்திர உறவை பேண வேண்டும். அதனை நாம் செய்துள்ளோம்.
சம்பூரில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இதன் உரிமம் இரு தரப்பினருக்கும் 50 வீதம் என்ற அடிப்படையில் கிடைக்கும். மின்சார அலகொன்று 0.59 டொலருக்கு எமக்கு கிடைக்கும். இதற்கான அமைச்சரவை அனுமதி விரைவில் அளிக்கப்படும்.” என்றார்.