ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக இந்த பிடியாணை உத்தரவு இன்று ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் வெளிநாட்டில் தங்கியுள்ள ஷாகிப், கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காசோலை மோசடி வழக்கில் பெயரிடப்பட்டார்.

டிசம்பர் 18 ஆம் திகதி, ஆரம்ப விசாரணைக்குப் பின்னர் இன்று ஜனவரி 19 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஷாகிப் மீதான வழக்கை, IFIC வங்கியின் அதிகாரி ஷாஹிபூர் ரஹ்மான், வங்கியின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு தனித்தனி காசோலைகள் மூலம் BDT 4,14,57,000 பரிமாற்றம் செய்வதற்கான உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியதாக ஷாகிப் மற்றும் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஷாகிப்பின் நிறுவனமான அல் ஹசன் அக்ரோ ஃபார்ம் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குனர் காசி ஷாஹாகிர் ஹொசைன் மற்றும் இயக்குநர்கள் எம்தாதுல் ஹக் மற்றும் மலைகார் பேகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு அறிக்கையின்படி, ஷாகிப்பின் நிறுவனம் IFIC வங்கியின் பனானி கிளையிலிருந்து பல்வேறு நேரங்களில் நிதி கடன் வாங்கியுள்ளது.

கடன்களில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவதற்காக காசோலைகள் வழங்கப்பட்டன, ஆனால் போதுமான நிதி இல்லாததால் அவை மதிப்பிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This