போர் நிறுத்த ஒப்பந்தம்; முதல் கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

போர் நிறுத்த ஒப்பந்தம்; முதல் கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (19) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கட்டார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் இருக்கும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்கள் அடங்குவர்.

அதேபோல் இஸ்ரேல் தரப்பு இந்த காலக்கட்டத்தில் 737 பாலஸ்தீனர்களை விடுவிக்கும். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது. இந்தப் பட்டியலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன் அமைப்பின் முக்கியத் தலைவர் புஷ்ரா அல் தவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ், இஸ்ரேல் விடுவிப்பு பட்டியல்கள் தயாராக இருந்தாலும் கூட இருதரப்பிலும் இந்த விடுவிப்பு நிகழ்வானது நாளை மாலை 4.00 மணி அளவில் நடக்கும் எனத் தெரிகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 இலட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிணைக் கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தம், போர் நிறுத்த ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தானாலும் கூட காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share This