தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தடை முதல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவும் தடை விதிக்கப்படும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்குக் கிடைத்த தகவல்களின் படி, ‘பாலிசி டாகுமெண்ட் ஃபார் டீம் இந்தியா’ என்று இந்த ஆவணத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் அடங்கிய சுற்றறிக்கை வீரர்களுக்கு வியாழக்கிழமையன்று அனுப்பப்பட்டது. அந்த நிபந்தனைகளின் விவரம்:

மிக முக்கியமாக அணி நிர்வாகத்தின் நடைமுறை விதிகளை மதிக்காமல் வீரர்கள் நடந்து கொள்வதால் ஓய்வறையில் நல்ல சூழல் நிலவுவதில்லை என்பது பெரிய விவகாரமாக விவாதிக்கப்பட்டது.

மைதானத்துக்கு அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் வராமல் தனியாக வரும் போக்கும் பெரும் விவாதத்துக்குள்ளானது. அதேபோல் பயிற்சிக் காலக்கட்டங்களில் வீரர்கள், பயிற்சியாளர் குழுவுடன் நேரத்தை செலவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் விவாதிக்கப்பட்டு அதற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

தனியாக வருவதென்றால் தலைமைப் பயிற்சியாளர் அல்லது தலைமைத் தேர்வாளரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

குடும்பத்தினருடன் வீரர் தனியாக வருவது என்பது அணியினருடன் பிணைப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு வருவது முதல் பயிற்சி முடிந்து செல்வது வரை என அணி வீரர்கள் சேர்ந்துதான் இருக்க வேண்டும்.

அதேபோல் எந்தத் தொடராக இருந்தாலும் குடும்பத்தினர், அதாவது மனைவி, குழந்தைகள் வீரருடன் 14 நாட்கள் இருக்கலாம். அதுவும் இந்த 14 நாட்கள் முதல் 2 வாரங்கள் கிடையாது.

குடும்பத்தினரோ அல்லது பார்வையாளராக யாராக இருந்தாலும் வீரர் அறையில் தங்கலாம். ஆனால், மற்ற செலவுகளை வீரர்தான் செய்து கொள்ள வேண்டும்.

பயணங்களின்போது வீரர்கள் தங்கள் சொந்த ஊழியர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த வேண்டும். அதாவது, தனிப்பட்ட முகாமையாளர், சமையல்காரர், உதவியாளர், பாதுகாவலர் என்று யாரை அழைத்து வருவதாக இருந்தாலும், முன்கூட்டியே அனுமதியின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும்.

பயணத்தின்போது சொந்த வர்த்தக விளம்பர படப்பிடிப்புகளில் நடிக்க ஒப்புக் கொள்ளக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வீரர்கள் ஆடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கிரிக்கெட்டை தவிர்த்தால் சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். அதோடு உள்நாட்டுக் கிரிக்கெட்டை தவிர்த்தால் மத்திய வீரர்கள் ஒப்பந்தத்திலும் அது தாக்கம் செலுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நிபந்தனைகளை வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மீறினால் தடைகள் உள்ளிட்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

Share This