லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ எப்படி உருவானது?

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ எப்படி உருவானது?

மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் டெமெஸ்கல் கன்யானின் மலையேறும் பாதை உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பசிபிக் பாலிசேட்ஸை உருவாக்கும், உயரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அலங்கார வீடுகள் நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விரும்பும் மலையேறுபவர்கள் அங்கு பசிபிக் பெருங்கடலின் நீரைத் தெளிவாக காணலாம்.

பள்ளத்தாக்கின் பச்சைப் போர்த்திய புதர்கள் இன்று சாம்பலாக மாறியுள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் சாம்பல் மேடுகளாக உள்ளது. மலையேறும் பாதைகளை தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கும் பொலிஸாரின் மஞ்சள்நிற ரிப்பன்கள் தடுத்து நிற்கின்றன. அந்தப் பகுதிகளில் பல வீடுகளை அழித்த பெருங்காட்டுத் தீ அங்கிருந்து தோன்றியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். நகரின் வடக்கே பல பகுதிகளிலும் இதுபோன்ற காட்சிகளையே காணமுடிகிறது. புலனாய்வாளர்கள் மலைகள் மற்றும் பாதைகளில் உள்ள பாறைகள், பாட்டில்கள், கேன்கள் போன்ற அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். என்றாலும், இந்தக் காட்டுத் தீயின் துவக்கம் இன்னும் பிடிபடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் அனைத்து லாஸ் ஏஞ்சல்ஸ்வாசிகளின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி ஒன்றுதான். அது, இந்தக் காட்டுத் தீ எங்கிருந்து தொடங்கியது? மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. என்றாலும், தீயால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த வாரத்தில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் வீசிய சாண்டா அனா காற்று தீயைப் பரப்பியது என தங்களுக்குள் காரணங்களைப் பேசித் தீர்க்கிறார்கள். இதனிடையே, சிலரின் விரல்கள், மலையேறுபவர்கள், மின் கோபுரங்களையும் சுட்டிக்காட்டுகின்றன.

காட்டுத் தீக்கான காரணங்களை குறித்து புலனாய்வு செய்து வருபவர்கள், இந்தக் கருதுகோள்களையும் கவனத்தில் கொள்கின்றனர். என்றாலும் அதனையும் தாண்டி காரணத்தைத் தேடுகின்றனர். தீ எரிந்த சென்ற வடிவங்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள், முதலில் பார்த்தவர்களின் சாட்சிகள் என நம்பிக்கையுடன் பல்வேறு துப்புக்களை பின்தொடர்ந்து காரணங்களை கண்டுபிடித்துவிட முயல்கின்றனர்.

ஆனாலும், இந்த மர்மம் தீர்க்கப்பட அதிக நாட்கள் எடுக்கும், ஒரு வருடம் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மது, போதைப்பொருள், தீயணைப்பு மற்றும் வெடிபொருள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லோருக்கும் பதில் தேவையாக இருக்கிறது. எங்களுக்கும் பதில் தேவை. இந்தச் சமூகம் அந்த பதிலுக்கு அருகதையுடையதே. ஆனாலும் பதில் கிடைக்க இன்னும் நேரம் பிடிக்கும்” என்றார்.

மலையேறுபவர்களின் வீடியோக்கள்: இயற்கை ஆர்வலர்களும், கலிபோர்னியாவின் கல்வெட்டு ஆய்வாளர்களும் அடிக்கடி செல்லும், டெமெஸ்கல் கன்யானில் மலையேறிக் கொண்டிருந்த கை கிரான்மோரும் அவரது நண்பர்களும் பாலிசேட்ஸில் உண்டான தீயை முதலில் பார்த்திருக்கலாம்.

இணையத்தில் பகிரப்பட்ட அவர்களின் பல வீடியோக்களில் ஜன.7-ம் திகதி காலையில் கிரான்மோர் மற்றும் அவரது நண்பர்கள் மலையில் இருந்து கீழே ஓடுகின்றனர். அவர்களின் முதல் வீடியோவில், அவர்கள் தப்பித்து ஓடும் முயற்சியில் இருக்கும் போது, அவர்களுக்கு பின்னே மலைகளில் இருந்து ஒரு நீண்ட புகை மேல் நோக்கி எழுகிறது. மூச்சுத் திணறல்களுக்கு இடையே அவர்கள் புகையை பார்ப்பதற்கு முன்பு ஏதோ எரிவதை உணர முடிந்ததாக கூறுகின்றனர். மற்றொரு வீடியோவில், அந்த புகை, கருமேகம் போல உருமாறி பின்பு தீப்பிழம்பாக மலைமேல் எரிகிறது.

பாலிசேஸ்ட் தீ குறித்த அதிகாரப்பூர்வ விசாரணையின் ஒரு பகுதியாக மலையேறுபவர்களின் வீடியோக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று ஏடிஎஃப்-ஐ சேர்ந்த கால்ப்ரூன் உறுதிப்படுத்தியுள்லார். இதனிடையே, அமெரிக்க ஊடகங்களில் பேட்டி அளித்த மலையேறும் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மீது தொடுக்கும் தாக்குதல் காரணமாக மிகவும் பயத்தில் இருப்பாத தெரிவித்துள்ளனர்.

கால்ப்ரூன் கூறுகையில், “இந்த மலைபகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். என்றாலும், அது முழுமையாக அணைக்கப்படவில்லை” என்றார். ஜனவரி 1-ம் திகதி ஏற்பட்ட அந்தத் தீ முழுமையாக அணைக்கப்படாததால், ஆறு நாட்கள் கழித்து காற்று அந்த தீயை வேகமாக பரவச் செய்திருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அங்கு நிலவுகிறது.

பாலிசேட்ஸ் காட்டுத் தீ உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஏற்பட்டதாக கருத்தப்படுகிறது. ஆனால், பல மலையேற்றக் குழுக்கள் காலையில் அந்தப் பாதை வழியாக போகும் போதே புகையின் வாசத்தை உணர்ந்ததாக ஊடகத்திடம் தெரிவித்தனர்.

பற்றி எரிந்த மின்கோபுரம்: இதனிடையே, தலைமை மாரோன் நகரின் மறுபுறம் உருவான ஈட்டன் காட்டுத் தீயை அணைப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார். ஈட்டன் காட்டுத் தீ ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவை எரித்து நாசமாக்கியுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர். பாலிசேட்ஸ் காட்டுத் தீ ஏற்பட்ட பல மணி நேரங்களுக்கு பின்னர் ஜனவரி 7-ம் திகதி சூரிய அஸ்தமனத்தின் போது ஈட்டன் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீயின் ஆரம்ப பொழுதுகளை ஜெஃப்ரி கு என்பவர் படம் பிடித்துள்ளார்.

அப்போது அந்த தீ மிகவும் சிறிய அளவிலேயே இருந்துள்ளது. அது ஒரு பெரிய இரும்பு கோபுரத்தின் கீழ் எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீ எவ்வளவு வேகமாக பரவியது என்பதை கு-வின் தொடர்ச்சியான வீடியோக்கள் காட்டுகின்றன. தற்போது தீ குறித்து விசாரித்து வரும் புலனாய்வாளர்களின் கவனத்தை கு-வின் வீடியோவில் உள்ள இரும்பு கோபுரம் ஈர்த்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, 85 பேர் உயிரிழப்புக்கு காரணமான கேம்ப் தீ விபத்து உட்பட கலிபோர்னியாவில் ஏற்பட்ட பல மோசமான தீ விபத்துக்களுக்கு மின்சாரம் வழங்கும் நிறுவங்களும், மின் கோபுரங்களும் காரணமாகியிருக்கின்றன என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

Share This