சீன மக்கள்தொகை – மூன்றாவது ஆண்டாகவும் சரிவு
சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024ஆம் ஆண்டிலும் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 13.9 இலட்சம் குறைந்து 140.8 கோடியாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின் மக்கள் தொகை சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தம்பதியா் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு கடந்த 1980-களில் தடை விதிக்கப்பட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் நாட்டில் வயதானவா்களின் விகிதம் அதிகரித்து, தேச முன்னேற்றத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞா்களின் விகிதம் குறைந்தது.
அதையடுத்து ஒற்றைக் குழைந்தைக் கொள்கையை சீனா 2021-இல் கைவிட்டது. இருந்தாலும், அதிகரித்துவரும் செலவுகள், பெண்கள் அதிகம் வேலைக்குப் போவது மற்றும் உயா் கல்வி கற்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காமல் அங்கு மக்கள் தொகை சரிவைக் கண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. ஆனால், கடந்த 2023-இல் அந்த நாட்டின் மக்கள் தொகையான 142.57 கோடியை விஞ்சி இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக அதிகரித்தைத் தொடா்ந்து, மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததாக ஐ.நா. அறிவித்தது நினைவுகூரத்தக்கது