ரயிலில் மசாஜ் – வைரலான காணொளி குறித்து தீவிர விசாரணை

ரயிலில் மசாஜ் – வைரலான காணொளி குறித்து தீவிர விசாரணை

ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது இலங்கை போக்குவரத்து சேவையால் இயக்கப்படும் ரயிலில் இடம்பெற்ற சம்பவம் இல்லை என ரயில்வே பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

“ஓர் இலங்கையர் மற்றும் ரயில்வே துறையின் ஊழியர் என்ற முறையில் இந்த சம்பவத்தை நான் மிகவும் அவமானகரமானதாகக் கருதுகிறேன்.

இந்த சம்பவம் இலங்கை ரயில்வேயால் இயக்கப்படும் வழக்கமான பயணிகள் ரயிலில் நடக்கவில்லை. மாறாக ஒரு தனியார் பயண நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு ரயிலில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் ‘ஒடிஸி’, ‘உடரட மணிக்கே’ அல்லது ‘போடி மணிக்கே’ போன்ற வழக்கமான ரயில்களில் நடக்கவில்லை. சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்கள் ரயில்வே துறையிலிருந்து ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் அத்தகைய ஒரு நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ரயிலிலேயே நடந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் ரயில்வே பொது மேலாளர் கூறியுள்ளார்.

விசாரணைகளை நடத்த உரிய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This