ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, பல மாத மத்தியஸ்த பணிக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக நேற்று அறிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் கத்தார் இடையேயான தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஜனவரி 19ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ஹமாஸ் முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்கும், பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியானது, போர்நிறுத்தத்தின் ஆறு வாரங்களுக்குள் பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவதற்கும் அனுமதிக்கிறது.
மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்தின் அனுசரணையில் பாலஸ்தீனிய அகதிகள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள்.
காசாவின் புனரமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் முழுமையான போர்நிறுத்தம், துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் என்று பைடன் வாஷிங்டனில் தெளிவுபடுத்தியிருந்தார்.