அநுரவின் புதிய ஒப்பந்தம் – ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் சீனா 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக முதலீடு செய்ய உள்ளது.
ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையமொன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 02 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டிருக்கும் என்பதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய இருநாடுகளும் ஒப்பந்தத்தின் பிரகாரம் திட்டமிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்காசியாவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை உருவாக வாய்ப்புள்ள சூழலில் ஏற்கனவே, அந்த துறைமுகத்தை 99 வருடங்களுக்கு இலங்கை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.
பெய்ஜிங் சார்புத் தலைவர்களாக கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இவ்வாறு 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அதேபோன்று சீனாவின் முதலீட்டில் அப்பாந்தோட்டை துறைமுகம், கிரிக்கெட் மைதானம் என பல திட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், தலைநகர் கொழும்பில் போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக நகரத் திட்டமும் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கையின் கடற்பரப்புக்குள் சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் வருகை தருவதற்கு இந்தியா ஏற்கனவே கடுமையான எதிர்ப்புகளை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவை கவலையடைய செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தை தமது அரசாங்கம் எடுக்காதென்ற உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.
ஆனால், தற்போதைய ஒப்பந்தம் சீனாவின் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான வழிமுறைகளை இலகுவாக்கியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அதிகளவான கப்பல்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும். இது இலங்கையில் பொருளாதாரத்துக்கு ஓரளவு பலம் சேர்க்கும் ஒப்பந்தமாக கருதப்படுகிற போதிலும், இந்தியாவுக்கு கவலையை அளிக்கும் ஒப்பந்தமாக இருக்கலாம்.
பட்டுப்பாதை திட்டத்துக்கும் தெற்காசிய பிராந்திய வணிக நடவடிக்கைகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக கருதுகிறது. அத்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தற்போதைய ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவின் பிரசன்னம் ஹம்பாந்தோட்டையில் மேலும் வலுபெறும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(சுப்ரமணியம் நிஷாந்தன்)