அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு
இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.
அனல் மின் உற்பத்திக்காக சலுகை விலையில் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் மின்சாரக் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு 28 பில்லியன் ரூபாய் எனும் அடிப்படையில் 56 பில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை அறிக்கையொன்றின் மூலம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு இது வரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அனல் மின் உற்பத்திக்காக டீசல், நெப்தா மற்றும் எரிபொருள் எண்ணெயை பயன்படுத்துவதாக கூறிய அதிகாரி மின் உற்பத்திக்காக அதிகளவிலான டீசல் தொகையை பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ளும் விலைக்கு மின்சார சபை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் , மின்சார உற்பத்திக்கான எரிபொருளை செலவுகளை ஈடுசெய்யும் விலையில் வழங்கினால் மின்சார சபைக்கு ஆண்டுதோறும் 56 பில்லியன் ரூபாயை சேமிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இது நாட்டின் மின்சார நுகர்வோருக்கு வழங்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.