நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் கரையோரப் பகுதிகளல் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை காலை ஆறு மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கி.மீ. வரை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30 -40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.