ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 முன்னணி அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை

ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 முன்னணி அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை

உலகளவில் ஊடகவியலாளர்கள பாதுகாக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் (Committee to Protect Journalists) இணைந்து வேறு பல 24 சிவில் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள், இலங்கையில் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் சர்வதேச பத்திரிகை நிறுவனம் (International Press Institute), சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட 24 அமைப்புகள், ஊடகச் சுதந்திரத்தை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளன.

சர்வதேச அளவில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளப் பாதுகாக்கும் சட்டங்களுக்கு உடன்படுவதாக இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது என்பதை அவர்கள் ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளனர். மேலும் அந்த உடன்படிக்கை மாத்திரமன்றி நாட்டின் அரசியல் யாப்பிலும் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தலைமையில் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் அறிக்கையில் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னர் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதை முன்னெடுத்து உறுதிபடுத்தப்படும் என கூறியிருந்ததையும் நினைவூட்டியுள்ளனர்.

“நாங்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசிடம் இவ்வாறாக கோரிக்கை வைக்கிறோம்: கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் ஆகியவை தொடர்பில் உடனடியாக மீள் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவை பாரபட்சமற்ற முறையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் மேலும் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை இவை சில பல ஊட்கவியலாளர்களின் மரணங்கள், கடத்தல்கள், உடல்ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படாமல், 26 ஆண்டுகள் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த போர்க் காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள்களையும் உள்ளடக்க வேண்டும்”.

25 அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்வகையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், சட்டவிரோத மரணங்களாக இருக்கக்கூடும் வழக்குகளின் விசாரணை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ‘மின்னசோட்டா நெறிமுறைகளின்’ (UNA Minnesota Chapter) அடிப்படையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

“சட்டவிரோதமான படுகொலைகளை காத்திரமான வகையில் தடுப்பது மற்றும் அதை விசாரிப்பது, தன்னிச்சையான, அழித்தொழிக்கும் படுகொலைகளை குறித்த சட்ட நடவடிக்கைகள்’ தொடர்பில் அந்த மின்னசோட்டா நெறிமுறைகளை 20 முக்கிய கோட்பாடுகளை கூறுகிறது. இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் அனைவரின் உயிர்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மரணங்களை உறுதியான வகையில் சர்வதேச சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களில் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய கடப்பாடுகளை அந்த மின்னசோட்டா நெறிமுறை வலியுறுத்துகிறது.

“சந்தேகத்திற்குரிய வகையில் இடம்பெற்ற சட்டவிரோதமான அனைத்து படுகொலைகள், இயற்கைக்கு மாறான மரணங்கள் எனக் கருதப்படுபவை போன்றவைகள் மீது உடனடியாக, முழுமையான, பாரபட்சமற்ற முறையிலான விசாரணைகள் இடம்பெற வேண்டும். இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளிக்கும் முறைப்பாடுகளும் அடங்கும். அப்படியான விசாரணைகளை முன்னெடுக்க அரசு உரிய விசாரணை அலுவலகங்கள் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அந்த விசாரணையின் நோக்கமானது மரணத்திற்கான காரணம், எப்படி அது நிகழ்ந்தது, எந்த நேரம் அல்லது சமயத்தில் இடம்பெற்றாது, அதற்கு பொறுப்பானவர் யார், அல்லது அந்த மரணம் சம்பவிப்பதற்கு தொடர்ச்சியான மாதிரிகள் அல்லது நடவடிக்கை ஏதாவது இருந்துள்ளதா” போன்றவை ஆராயப்பட வேண்டும் என்று அந்த நெறிமுறைகளில் ‘விசாரணை’ என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் அது திறன்பட இருக்க வேண்டுமென்றும் அச்சமயத்தில் சாட்சியம் அளிப்பவர்கள் மற்றும் விசாரணையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்கள் கோரியுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ மற்றும் பிரகீத் எக்நெலிகொட போன்ற ஊடகயவிலாளர்களின் மரணம் தொடர்பில் எவ்வித காத்திரமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிவராம் வழக்கு உட்பட 7 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்ட அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அவர்கள், அந்த மீள் விசாரணையும் இழுத்தடிக்கப்படாமல், குறித்த காலத்திற்குள்ளும், திறன்படவும் முடிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், ஊடகவியலாளர்கள், குறிப்பாக தமிழர்கள் மீதான துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகியவை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. அவர்கள் நீண்டகாலமாக தமது செய்தி சேகரிப்பு பணியின் போது கண்காணிக்கப்படுவதும், தேவையில்லாத தடைகள் விதிக்கப்படுவதையும் எதிர்கொண்டு வருகிறார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“ஊடகவியலாளர்கள் மீது அவர்கள் பணி தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள குற்ற வழக்குகளை சட்டத்தை நிலைநாட்டு அதிகாரிகள் மீளப்பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் ”பொதுச் சேவை ஊழியர்களை அச்சுறுத்துவதான” குற்றச்சாட்டில் அவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக்கூடாது”.

இந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதியிட்டுள்ள அவர்களின் அறிக்கையில், ஊடகச் சுதந்திரத்திற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் இணையதள பாதுகாப்புச் சட்டமும், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.

“கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை கடுமையாக நசுக்கும் அந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இணையதளத்தில் வெளியாகும் விடயங்களை கடுமையாக தணிக்கும் செய்யும் ஆணைக்குழுவிற்கு அதி கூடிய அதிகாரங்கள் வழங்கும் நிலையில், அது இரத்து செய்யப்பட வேண்டும்”.

அந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய இணையபாதுகாப்புச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்படாலாம் என கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், அது இணையவழியாக ஏற்படுத்தும் நியாயமான தீங்குகளை தடுக்க முயன்றாலும், இணையத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரத்தை நியாயப்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது எனவும் கோர்யுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் ஊடகவியலாளர்களை மாத்திரமன்றி காலவரையின்றி மக்களை தடுத்து வைக்கும் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஏகமனதாக அந்த 25 அமைப்பினரும் கண்டித்துள்ளனர்.

“ஊடகவியலாளர்களை அவர்களின் பணிக்காக மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி, சிறையில் அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட குற்றங்கள் ஏதாவது இருந்தால் அவை நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும்”.
நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தையும் திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

அந்த சட்டம் பொது நலனில் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அது குறித்து செய்தி வெளியிடுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்றும், நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க ஊடக அனுமதி அதிகரிக்கப்பட வேண்டும், நல்லுறவு பேணப்படும் வகையில் அது இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புலனாய்வு விசாரணை செய்திகளுக்கு மிகவும் அவசியமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும், அப்படியான அம்சங்கள் அந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை வேண்டுகிறது.

எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு, பெண் இண்டர்நேசனல், சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் ஆகியோரும் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஊடகத்துறை தொடர்பாக சுய தணிக்கை ஆணைக்கழு ஒன்றை ஏற்படுத்த அவர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவை வேண்டியுள்ளனர். அந்த ஆணைக்குழு ஊடகவியலாளர்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல், அவர்களை குற்றவாளிகள் போன்று சித்தரிக்காமல், ஊடக அறம் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

“அந்த ஆணைக்குழு நேர்மையாகவும் நியாயமான வகையிலும் ஊடகத்துறையிலிருந்து போதிய பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் ஒரு நீதிமன்றத்தில் அதன் முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்”.

ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, தான் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர் என நிரூபிக்க அவருக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர்கள் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Share This