பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை – உண்மைகள் வெளிவருமா?

பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை – உண்மைகள் வெளிவருமா?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்த தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்களிடம் புலனாய்வுத் துறை விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அத்துடன், பசில் ராஜபக்சவுடன் தொடர்புடைய சொத்துக்கள் குறித்தும் பாதுகாப்புப் படையினரும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்காவில் எவ்வித தொழிலும் செய்யாத பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் எவ்வாறு பாரியளவான சொத்துகள் உள்ளன என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் உறவினர்களுக்கும் பாரிய சொத்துக்கள் இருப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் வாக்குமூலமொன்றை குற்றப்புலனாய்வு பிரிவு அண்மையில் விமல் வீரவங்சவிடம் பெற்றிருந்தது. இந்தப் பின்புலத்திலேயே தற்போது புலனாய்வு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ச, பொதுத் தேர்தலின் போதுகூட நாடு திரும்பியிருக்கவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் கையளிக்கப்பட்டுள்ளதால் பசில் ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என தமக்கே தெரியாதென பொதுஜன பெரமுனவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share This