அரிசி இறக்குமதி எனும் போர்வையில் தானியங்கள் இறக்குமதி – முன்னாள் விவசாய அமைச்சர்
நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் அதிகளவில் பாஸ்மதி அரிசி, பயறு, வேர்கடலை மற்றும் உளுந்து ஆகியவை காணப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
திட்டமிட்ட குழுவொன்று அரிசி கொள்கலன்களுக்கு இடையே ஏனைய தானியங்களை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளதாகவும் தற்போது அவற்றை அவர்களின் தொகை களஞ்சியசாலைகளில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸ்மதி அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் அதிகளவு வரியை விதிப்பதால் நாட்டு அரிசியை இறக்குமதி செய்யும் பெயரில் 65 ரூபாய் வரியின் கீழ் பாரியளவு பாஸ்மதி அரிசியை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது சந்தையில் பாஸ்மதி அரிசி மாத்திரமன்றி பயறு, உளுந்து ஆகிய தானியங்களின் விலைகளில் சற்று வீழ்ச்சி காணப்படுவதற்கான காரணம் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தொகையானது சந்தைக்கு விடுவிக்கப்பட்டமையே என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையானது பாரிய அளவிலான வர்த்தகர்கள் மூலம் மீள பொதியிடப்பட்டு அதிக விலைக்கு சந்தைக்கு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் நாட்டில் அரிசி விநியோகத்தை அரசாங்கம் நிர்வகிக்கத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
நாட்டினுள் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அந்த அரிசித் தொகை தற்போது நெல் ஆலைகளில் காணப்படுவதாகவும் அவற்றை அதிக விலைக்கு ரகசியமாக விற்பனை செய்து வருவதாவும் அவர் வெளிப்படுத்தினார்.
தான் விவசாய அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அரிசி கிலோ ஒன்றின் சாதாரண விலை 170 ரூபாயை விடவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் முந்தைய அரசாங்கம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரிசி விநியோகித்ததால் அரிசி நெருக்கடி ஏற்படவில்லை, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு சிவப்பு அரிசி மட்டுமல்ல, வெள்ளை அரிசியையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் விவசாய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிவப்பு பச்சையரிசி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் தொடர்பில் தனக்கு தெரியும் எனவும் அவசியமெனில் அவற்றை கண்டுபிடித்து தர முடியும் எனவும் அவர் விளக்கமளித்தார்.