ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்!
ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒருவன்” செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது பெயர் மாற்றம் செய்து அதிகளவான மக்கள் ஆணையைப் பெற்றாலும் கூட அது ஒரு பெயர் மாற்றம் மாத்திரம் தானா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தை ஒரு இரவில் எரித்து கைப்பற்றுவோம் எனக் கூறிய கட்சி தான் இந்த ஜேவிபி எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அநுர அரசாங்கம் சர்வதேசத்தின் கைபெ்பொம்மையாக மாறிவிடுமா என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி கட்சியானது தனது திட்டங்களிலும், கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இல்லை என்பது தற்போது தெளிவாகிறது.
சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு பல நெருக்கடிகளையும் சவால்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வந்த நிலையில் நாட்டிற்கு உரிய ஒரு அஸ்திவாரம், அடித்தளம் இப்போது வரையில் சரியாக அமையவில்லை.
அதற்கான காரணம் சுமார் 76 வருடங்களாக ஊழல்வாதிகள் மாறி மாறி ஆட்சியமைத்தமையே ஆகும்.
ஒரு வகையில் இலங்கை அபிவிருத்தி அடைந்திருந்தாலும் கூட அந்த அபிவிருத்திகளின் பின்னணியில் பல ஊழல் மோசடிகள் தான் மறைந்து கிடக்கின்றன.
இவ்வாறான காரணங்கள் தான் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வித்திட்டது.
மாபெரும் மக்கள் போராட்டமாக அது வளர்ந்தது. அன்று எப்படி நாட்டு மக்கள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை ஆட்சிக் கதிரையில் இருந்து துரத்தினார்களோ அதே மக்கள் சக்தி தான் இன்று பல ஆண்டுகளாக ஆயுத இயக்கமாக இருந்த ஒரு இயக்கத்துடன் சார்ந்த கட்சியை அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் அமர்த்தியது.
ஆக, மக்கள் அதிகாரம் என்பது தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு மாற்றத்திற்கு வித்திட்டது. அந்த விதை 2025ஆம் ஆண்டில் வேரூன்றிய விருட்சமாகுமா அல்லது வாடிவிடுமா என்ற கேள்வி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கமும் விமர்சிப்பவர்களை விமர்சித்து எதிர்க்கட்சிகளைப் போல குற்றம் சுமத்தி வருகிறது.
தேர்தல் மேடைகளில் வழங்கும் அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக் கதிரையில் அமர்ந்து நிறைவேற்ற முடியுமா? அது நடைமுறைக்கு சாத்தியமாக அமையுமா என்பது தொடர்பில் கலாநிதி சுரேன் ராகவனிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இருதயத்தில் இந்த நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அவா உள்ளதை தான் நம்புவதாக தெரிவித்தார்.
சாதாரண ஒரு மனிதனாக இருந்த ஒருவர் ஜனாதிபதியாக உள்ளமை மகிழ்ச்சி. இருப்பினும் அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் விட்ட பிழையை மறுக்க முடியாது. ஒரு அரசாங்கத்தின் முதலாவது நியமனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனினும் அவருடைய அந்த முதல் நியமனத்தை தவறாக தான் பார்க்கிறேன் ஏனெனில் அவருடைய அந்த நியமனத்தில் அரசியல் ஞானம் இல்லை என கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் அனுபவின்மை வெளிப்பட்டது மாத்திரமன்றி சபாநாயகர் விடயத்திலும் அரசாங்கம் விட்ட பிழை மாறாத கரையாக படியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அநுர அரசாங்கத்தின் ஒரு கறுப்பு புள்ளியாக சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா பார்க்கப்படுகிறது.
போலியான கல்வித் தகைமைகளை மக்களுக்கு காட்டியது மட்டுமன்றி அதனை நிரூபிப்பதாக வாக்குறுதியளித்து இன்று வரையில் அதை நிரூபிக்க முன்வரவில்லை. ஆக, இவ்விடயம் அநுர அரசாங்கத்திற்கு அரசியல் ஞானம் இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறான பின்னணியில், இலங்கையின் 76 வருட கால ஆட்சியமைப்பை மாற்றியமைக்கும் விதத்தில் வரலாற்றில் இடம்பிடித்த அறுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியானது உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளில் அதிக அவதானத்திற்கு உள்ளான ஒரு விடயம் ஆகும். தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு, அதற்காக பல வெளிநாடுகளிலும் சென்று பிரசாரத்தை மேற்கொண்ட தேர்தல் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சர்வதேசத்தில் அவதானிக்கப்பட்டார்.
ஆகவே, அநுர சார்ந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறிய பின் அவர்கள் மீதான சர்வதேசத்தின் அவதானம் இன்னுமும் மும்முரமாகியது. அநுரவின் கொள்ளை விளக்க உரையில் ஆரம்பித்து அவருடைய முதல் சர்வதேச பயணம் வரையில் அதிக அவதானங்கள் அநுர மீது செலுத்தப்பட்டன.
அதில் மிக முக்கியமான இரு நாடுகளாக இந்தியா, சீனா ஆகியவை காணப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பமான ஜேவிபியின் வரலாறு இந்தியாவுடன் சார்பானதாக எப்போதும் இருந்ததில்லை. எனினும், சீன கம்யூனிஸ்ட் கொள்கைகளை கையாண்டு வந்த ஜேவிபியின் நவீன கட்சி தேசிய மக்கள் சக்தி தலைவரின் முதலாவது சர்வதேச பயணம் இந்தியாவுடன் அமைந்திருந்தமை மேலும் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியது.
அண்மையில் அரச ஊடகங்களை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, இந்த குழப்பம் இன்னுமும் மேலோங்கியது.
தற்போதைய ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல நட்பு உள்ளதாகவும், அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்க தயார் என்பதும் தெளிவாகிறது எனவும் சுரேன் ராகவன் கூறினார் . ஆக, இதன் விளைவாக ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாம்மையாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் பகிரங்கப்படுத்தினார்.
தான் எந்தப் பாதையிலே பயணிக்கின்றோம் என்பதில் திட்டமும் நோக்கமும் இல்லாத ஒருவரால் விபத்து மாத்திரமே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டாயமாக அநுரவின் அடுத்த கட்ட நகர்வு இந்தியாவுடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினையை பேசத் தயங்குவது தவறு எனவும் தமிழர்களுக்கென தற்போது இருக்கும் உரிமைகளையும் அரசாங்கம் பறிக்குமாக இருந்தால் வன்முறையற்ற அரசியலின் எதிர்ப்பை செய்வோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.
அநுரகுமார திஸாநாயக்க டில்லிக்கு சென்றிருந்த போதும் தமிழ்நாட்டில் சுமார் 40 வருடங்களாக அகதிகளாக வேதனைப்பட்டு வருபவர்களை பார்க்க செல்லாதமை தொடர்பில் சுரேன் ராகவன் குற்றம் சுமத்தினார்.
இந்த புதிய அரசியல் வாய்ப்பின் அரசியல் மொழியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இனி நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேசத்துக்கு எங்களை உரக்க கூறக் கூடிய ஒரு அரசியல் பாதையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் தனித்தனியாக செல்லாமல் ஒரு குழுவாக இணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல தமிழ் அரசிய்லவாதிகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. எனினும், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சரியாக செய்கின்றார்களா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
இதனை மேலும் விளக்கிய அவர்,
தமிழ் அரசியல் சாதாரண அரசியல் அல்ல. வடக்கு கிழக்கு மாகாணத்தில் மட்டும் தமிழர்கள் மத்தியில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு மேல் காணப்படுகின்றன.
தங்களை வெற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளை அல்லாமல் ஒன்றாக இணைந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும்.’ என அவர் விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், இலங்கைத்தீவு குறிப்பிட்ட சில வருடங்களாகவே பல சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வந்தது. பல நெருக்கடிகளால் தவித்த மக்கள் ஆணைக்கு நிச்சயமாக அநுர தரப்பு உண்மையாக இருக்க வேண்டும்.
ஐந்து வருட ஆட்சியை நூறு நாட்களுக்குள் நடத்தி முடிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இருப்பினும் நிறைவேற்று அதிகாரத்தையும், அறுதிப் பெரும்பான்மையையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு சிறுபிள்ளைப் போல விமர்சனம் செய்து கொண்டும், எதிர்க்கட்சிகளைப் போல கடந்த அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டும் இருப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.
இதன்மூலம் ஆநரகுமார தலைமையிலான அரசாங்கத்திற்கு அரசியல் ஞானமும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆக, “அனுபவமற்றவர்கள்” என்ற பெயரை நீக்க அநுர தரப்பு முன்வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
(கனூஷியா புஷ்பகுமார்)
நேர்காணலை முழுமையாக பார்வையிட,