திபெத் அணைக்கட்டை சீனா தவறாகப் பயன்படுத்தும் என இந்தியா அச்சம்

திபெத் அணைக்கட்டை சீனா தவறாகப் பயன்படுத்தும் என இந்தியா அச்சம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது.

இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. யார்லுங் சாங்போ ஆற்றில் அந்த அணைக்கட்டு அமையும்.

அந்த அணைக்கட்டால் இந்திய-சீன உறவில் மீண்டும் சர்ச்சை எழும் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.

புதிய அணைக்கட்டுக்கான திட்டங்கள் தொடர்பில் வெளிப்படையாக இருக்குமாறும் தங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுமாறும் இந்தியா, சீனாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

யார்லுங் சாங்போ ஆற்றின் ஒரு பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் வழியாக அந்நாட்டுக்குள்ளும் வருகிறது. இந்தியாவில் உள்ள அந்த ஆற்றின் பகுதி பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படுகிறது.

அருணாசலப் பிரதேசம் முழுவதும் தனக்குச் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் எல்லைப் பகுதியில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கசப்படைந்தது. அந்த மோதலில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்களும் சீனாவைச் சேர்ந்த நான்கு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அதற்கு சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகுதான் இருநாட்டு உறவு மேம்பட்டது.

எனினும், இந்திய தரப்பில் சீனாவின் எண்ணம் தொடர்பில் இன்னும் முழு நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூசல் மோசமடையும்போது புதிய அணைக்கட்டைக் கொண்டு சீனா, எல்லைப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படச் செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதோடு, விவசாயம், குடிநீர் போன்ற காரணங்களுக்காக இந்தியாவிலும் பங்ளாதே‌ஷிலும் மில்லியன் கணக்கானோர் நம்பியிருக்கும் ஆற்றில் புதிய அணைக்கட்டால் நீர் விநியோகம் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.

சீன அரசாங்கம் நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம், புதிய அணைக்கட்டைக் கட்டுவதற்கு சீன அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி தெரிவித்தது. அந்த அணைக்கட்டு, உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தென்மேற்கு சீனாவின் சிஸாங் தன்னாட்சிப் பகுதியை (திபேத்துக்கு சீனா சூட்டியிருக்கும் பெயர்) செழிப்படையச் செய்யவும் வகைசெய்யும் என்றும் சின்ஹுவா குறிப்பிட்டது.

அச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்தியா, இந்த விவகாரத்தைப் பற்றிய அக்கறைகளை சீனாவிடம் முன்வைத்திருப்பதாக இந்திய வெளியுறவு விவகார அமைச்சுப் பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வல் இம்மாதம் மூன்றாம் திகதி தெரிவித்திருந்தார்.

Share This