சபாநாயகரை இந்தியாவுக்கு வருமாறு உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அழைப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சந்திப்பின் போது, உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு சபாநாயகரை அவர் அழைத்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தை ஆதரிப்பதற்கான இந்தியாவின் திட்டங்களையும் உயர் ஸ்தானிகர் எடுத்துரைத்துள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதில் சபாநாயகரின் வழிகாட்டுதல் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடாளுமன்றங்களின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்களிடையே நெருக்கமான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உயர் ஸ்தானிகர் எடுத்துள்ளார். இதன் மூலம், கூட்டுறவை வலுப்படுத்தவும், பயனுள்ள கொள்கை வகுப்பில் பெண்களின் பங்கை மேம்படுத்தவும் முடியும்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் கலாச்சார பிணைப்புகளை எடுத்துரைத்ததுடன், பல்வேறு துறைகளில் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பொருளாதார மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.