அரச ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் சம்பள உயர்வு உறுதி – எதிர்க்கட்சிகள் பீதியடைய தேவையில்லை
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) எந்தவித ஆட்சேபனையும் இல்லை என உறுதியளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறினார்.
25,000 ரூபாவை அதிகரிப்போம் என நாம் கூறவில்லை. எமது தேர்தல் வாக்குறுதியிலும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முதல் நாள் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
அதற்கான சிறந்த பாடத்தை அரச ஊழியர்கள் கற்பித்திருந்தனர். உறுதியாக வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறும். ஆனால், எவ்வளவு அதிகரிக்கப்படும் என தற்போது கூற முடியாது. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பீதியடைய தேவையில்லை.” என்றார்.