லசந்த விக்கிரமதுங்க படுகொலை 16 வருடங்கள் பூர்த்தி
மக்களுக்காக ஊடகவியலில் ஈடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசியிரயராக லசந்த விக்ரமதுங்க பல ஊழல் மோசடி சம்பவங்களை மக்கள் முன் வெளிப்படுத்தினார்.
அவர் தனது வாழ்க்கையை இரண்டாவதாகவே கருதினார்.
யாராலும் நெருங்கக்கூட முடியாத பல விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு வெளிப்படுத்திய இந்த புலனாய்வில் சிறந்த ஊடகவியலாளர் இல்லையேல் இன்று வரையில் பல தகவல்கள் யாரும் அறியாமலேயே போயிருக்கும்.
இவ்வாறான விடயங்களினாலேயே அவருடைய வாழ்க்கைக்கும், உயிருக்கும் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இறுதியாக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி காலை 10.25க்கு லசந்த விக்கிரமதுங்கவின் உயிர் பறிக்கப்பட்டது.
வழமை போன்று பணிக்கு சென்று கொண்டிருந்த லசந்த விக்கிரமதுங்க அத்திடிய வீதியில் கொல்லப்பட்டார்.
இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை கொலை செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வேளையில், அவருடைய மரணத்தால் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் கூட ஏற்பட்டன.
ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்படி, 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் மீட்கப்பட்டதுடன், சில சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதும் விசாரணைகள் தொக்கி நின்றன.
இன்று வரையில் அவருக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.
பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள லசந்தவுக்கு, ஐ.பி.ஐ. உலக பத்திரிகை சுதந்திர நாயகன் விருது வழங்கி கௌரவித்தது.