விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?
பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகளுள் வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் அரசியல்வாதியொருவரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் தேசிய சொத்தை கொள்ளையடித்த வழக்குகளில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட பிரபல அதிகாரிகளுக்கு மற்றும் பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவுக்கு எதிராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் உடனடியாக வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல்வாதியின் மனைவி தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில் வெவ்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த அனைத்து விசாரணைகளையும் சரியான முறையில் நடத்திய பின்னர் அனைத்து சந்தேகநபர்களுக்கு எதிராகவும் விரைவான மற்றும் முறையான ரீதியில் சட்டத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறித்த சிங்கள நாளிதழிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.