இலங்கை பாதுகாப்பு படைகளை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தமிழர்களின் சுயாதீன செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலா?

இலங்கை பாதுகாப்பு படைகளை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தமிழர்களின் சுயாதீன செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலா?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இராணுவத்தை நவீனமயப்படுத்த இடம்பெறும் முயற்சிகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் பிரசனத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமகால அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கற்கை நிலையத்தில் (NMA) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நவீனமயமாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நவீனமயப்படுவதன் ஊடாக பாதுகாப்புப் படைகள் நாட்டைப் பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். ஆயுதப் படை கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்,  ஆட்சேர்ப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பணியாளர் தேர்வில் அளவை விட தரத்தில் கவனம் செலுத்தவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது 400 இற்கும் மேற்பட்ட ஹெலிகப்டர் தாக்குதல்களை நடத்தியவராக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா இருக்கிறார். இலங்கை பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கண்மூடித்தனமாக மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தாக சர்வதேச அமைப்புகள் பல போர்க்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தியுள்ளன.

அதேபோன்று பாதுகாப்பு வளையங்கள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டுகள் உள்ளன. 400 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்த தலைமைத் தாங்கியுள்ள தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டாவின் செயல்பாடுகள் தமிழ் பகுதிகளில் எதிர்காலத்தில் பாரிய அச்சுத்தலான சூழ்நிலைகளை உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிக்றனர்.

குறிப்பாக சமகால அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் இராணுவ மற்றும் பாதுகாப்பு தரப்பின் உடைகள் அணிந்த வண்ணம் வடக்கின் பாடசாலை நிகழ்வுகள் மற்றும் சில நிகழ்வுகளில் படையினர் தோன்றுவது ஆபத்தானதாகும்.

தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் என்பது தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் விரிவான கண்காணிப்பு பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தலான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பளை வத்திறையான் பகுதியில் இளம்பிறை பாலர் பாடசாலையைச் சேர்ந்த சிறார்களுக்கு 10ஆவது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் படையினர் ‘சத்தான மதிய உணவு’ வழங்கும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் சீருடை அணிந்தே குழந்தைகளுக்கு உணவு வழங்கியுள்ளனர். இதுதொடர்பிலான புகைப்படங்களும் உள்ளன.

போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் மேஜர் ஜெனரல் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் பூநகரி வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வொன்று நடைபெற்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) வெளியிட்ட ஆவணத்தின்படி, 2008- 2009 காலப்பகுதியில் போரின் உச்சக்கட்டத்தில் விக்கிரமசிங்க முன்னணியில் போரில் ஈடுபட்ட  8வது படைப்பிரிவான கஜபா படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர்கள் எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பினரின் உடையுடன் பொது இடங்களில் நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இது தமிழ் மக்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு பலத் தடைகளை ஏற்படுத்துவதாக அமைவதாகவும் வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share This