பிரித்தானியாவில் புகலிட மோசடி – ஓரினச்சேர்க்கை போன்று உருவகப்படுத்திக்கொள்ள ஆலோசகர்கள் உதவி

பிரித்தானியாவில் புகலிட மோசடி – ஓரினச்சேர்க்கை போன்று உருவகப்படுத்திக்கொள்ள ஆலோசகர்கள் உதவி

 

 மறைமுக வணிகம் அம்பலம் – சட்ட ஆலோசகர்கள் துணையுடன் நடக்கும்

முறைகேடு குறித்து பிபிசியின் இரகசிய விசாரணை

பிரித்தானியாவின் புகலிட மற்றும் குடியேற்றக் கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான அரசியல் விவாதங்களின் மையமாக இருந்து வருகின்றன. குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றம், சிறிய படகுகள் மூலம் வருகை, மற்றும் புகலிடக் கோரிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், போலியான புகலிடக் கோரிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகின்றமை குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும்
கடுமையாக்க வேண்டும் என்ற வலதுசாரி அரசியல் வாதங்களை வலுப்படுத்தக்கூடும்.

புகலிட அமைப்பு என்பது உண்மையான உயிர் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான மனிதாபிமான நடைமுறை.
ஆனால், அண்மைய விசாரணைகள் இந்த நடைமுறையை திட்டமிட்டு தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்பதை காட்டுகின்றன.

போலியான ஆதாரங்கள், கற்பனை கதைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்படும் இத்தகைய விண்ணப்பங்கள், முழு அமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன. இதனால், உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுகிறவர்களின் நிலையும் பாதிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தங்குவதற்காக, புலம்பெயர்ந்தோர் தங்களை போலியாக ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்று
அடையாளப்படுத்திற்கொள்வதற்கு உதவுவதற்காக மறைமுக வணிக வலையமைப்பொன்று செயற்பட்டு வருகின்றமை பிபிசி விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசா காலம் நிறைவடையவுள்ள நபர்களுக்கு போலியான பின்னணிக் கதைகள் உருவாக்கப்படுகின்றமை பிபிசியின் இரகசிய விசாரணையின் முதற்கட்டத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், ஆதரவுக் கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் போன்ற போலி ஆதாரங்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும்
என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பின்னர், தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் திரும்பினால்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி தஞ்சம் கோரும் நடைமுறை பயன்படுத்தபட்டுள்ளது.

விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சில சட்ட நிறுவனங்கள் போலி புகலிடக் கோரிக்கைக்காக £7,000 வரை வசூலித்துள்ளதுடன், போலியான மருத்துவ அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் ஆதரவுக் கடிதங்களையும் தயாரித்து வழங்கியுள்ளன.
மேலும், ஒரு ஆலோசகர் 17 ஆண்டுகளாக இத்தகைய சேவையில் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார். சிலர் £1,500 முதல் £3,000 வரை கூடுதல் கட்டணத்தில் ஆதாரங்களை உருவாக்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்ல என்று தாமாகவே ஒப்புக்கொண்ட சம்பவமும் விசாரணையில் பதிவாகியுள்ளது.

மேலும், தனிசா கான் என அறிமுகமான ஆலோசகர் ஒருவர், போலியான கதைகளை மனப்பாடம் செய்யக் கூறல்,களியாட்ட விடுதிகளில்
எடுத்த புகைப்படங்களை ஆதாரமாக பயன்படுத்துவது மற்றும் போலியான உறவு கடிதங்களை உருவாக்குவது போன்ற முறைகளை விளக்கியுள்ளார். இவரது சேவைக்காக £2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த குடிவரவு சட்ட நிபுணர் அனா கோன்சலஸ், இத்தகைய மோசடிகள் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், உண்மையை நிருபிக்கும் செயன்முறை மேலும் கடினமாகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, தன்மீதான குற்றச்சாட்டுகளை தனிசா கான் மறுத்துள்ளார்.  அதேவேளை, சட்டம் மற்றும் நீதி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள், இந்த விவகாரம் குறித்து உள்ளக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளன.

மொத்தத்தில், இந்த விசாரணை பிரித்தானியாவின் புகலிட அமைப்பு சிலரால் திட்டமிட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும், அதன் விளைவாக உண்மையான அகதிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

புகலிட அமைப்பைச் சுரண்டும் இந்த மோசடி வலையமைப்பு, பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கைகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்துவதுடன், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இதனைச் சரியாக கையாளத் தவறும் பட்சத்தில்,எதிர்கால அரசியல் சூழலையும், குடியேற்றக் கொள்கைகளையும் மாற்றக்கூடும்.

பாலகணேஷ் டிலுக்ஷா

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )