“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” – வவுனியாவில் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” – வவுனியாவில் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?, ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா, 15 வருடங்களாகப் போராடும் எமக்கு விடிவு இல்லையா?” எனப் பல்வேறு கோஷங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. அமர்வில் எமக்கான நீதியைப் பெற்றுத் தர ஐ.நா. வலியுறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்துக்கு  நீதி கிடைக்க வேண்டும்.” – என்றனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share This