
மத்திய கிழக்கில் இராணுவ நகர்வு – இரு நாள் நேரடி துப்பாக்கி பயிற்சியை அறிவித்த ஈரான்
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட இராணுவ சொத்துகளை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு நாள் நேரடி-துப்பாக்கி சூடு பயிற்சியை ஈரான் அறிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்க போர்க்கப்பல்களை நோக்கி ஈரானிய வேகப் படகுகள் ஆபத்தான முறையில் நெருங்குவது அல்லது கப்பல்களின் மீது பறப்பது போன்ற “பாதுகாப்பற்ற” நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM),எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப வாரங்களாக தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை ஈரான் கடுமையாக ஒடுக்கியதையும், அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தையும் காரணமாகக் கொண்டு, ஈரானை தாக்கும் வாய்ப்பை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது நாடு நியாயமான மற்றும் சமத்துவமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆனாலும், ட்ரம்ப் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளை அவர் நிராகரித்தார். பாதுகாப்பு உத்திகள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தைக்குரியவை அல்ல என்றும் அவர் கூறினார்.
