
சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென ட்ரம்ப் எச்சரிக்கை
சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர் தனது சீனாவுக்கான பயணத்தின் மூன்றாவது நாளில் ஷாங்காயை சென்றடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கை பிரித்தானியா பிரதமர் சந்தித்ததையடுத்து, பிரித்தானிய –சீனா வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் பல ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், சீன ஜனாதிபதி சி யை தனது நண்பர்” என குறிப்பிட்டு, அவரை நன்றாக அறிந்திருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், சீனாவுடன் பிரித்தானியா வணிகம் செய்வது குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த டவுனிங் ஸ்ட்ரீட், இந்த பயணம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு செல்லவிருந்தார் என்பதையும் குறிப்பிடப்பட்டது.
இதனிடையே, சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவிற்கு இன்னும் ஆபத்தானது என்றும் ட்ரம்ப் கூறினார். சீனாவை தீர்வாக பார்க்க முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.
அண்மையில் கனடா பிரதமர் மார்க் கார்னி பெய்ஜிங்கிற்கு சென்று சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்தினால்
கனடாவுக்கு வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
மற்றொரு பக்கம், சீனாவுடன் பிரித்தானியாவின் உறவு தற்போது “நல்ல மற்றும் வலுவான நிலையில்” இருப்பதாக ஸ்டார்மர் தெரிவித்தார்.
