டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு

நாட்டை உலுக்கிய “டிட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் பரவலாக ஏற்பட்ட இந்தப் பாதிப்பைக் கையாள்வதில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்புரவு செய்வதற்கும் முதற்கட்ட தேவைகளுக்காக தலா 25,000 ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்க 4,34,375 வீடுகள் அடையாளம் காணப்பட்டன.

இதில் தற்போது வரை 97.5 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு, 4,23,914 குடும்பங்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீட்டு உபகரணங்களை இழந்த 1,63,509 குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ், 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அதாவது 1,15,757 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகள் சேதமடைந்த விதம், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிப்பதால் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தகவல் தொடர்புத் துண்டிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சரவை மற்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அடையாளம் காணப்பட்ட எஞ்சிய அனைத்துப் பயனாளிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்குள் முழுமையான நஷ்டஈடு வழங்கி முடிக்கப்படும் என அவர் மேலும் உறுதியளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )