
தமிழகம் – விருதுநகரில் திடீரென நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த பொது மக்கள்
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜனவரி 29, 2026) இரவு திடீரென இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தச் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம் மற்றும் பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த அதிர்வின் போது, வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாகவும், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புவியியல் ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை.
இந்த அதிர்வினால் பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாக உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், சாலைகளில் திரண்டிருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.
“தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், பாதுகாப்பு கருதி மக்கள் திறந்தவெளிகளில் நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்
